நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய அணி குரூப் பிரிவுகளில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதையடுத்து, இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருந்த அரையிறுதி போட்டி மழைக்காரணமாக ரத்தானதால், புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணி இறுதிசுற்றுவரை முன்னேறுவதற்கு பல வீராங்கனைகளின் பங்களிப்புகள் இருந்தாலும், பந்துவீச்சு துறையில் லெக் ஸ்பின்னர் பூனம் யாதவின் பங்களிப்பு அளப்பரியது.
ஹர்மன்ப்ரீத் கவுர் உடன் பூனம் யாதவ். இந்த தொடரில் இந்திய அணி ஒவ்வொரு பேட்டிங்கில் சொதப்பியபோதும், அவர் தனது சிறப்பான பந்துவீச்சினால் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினார். இந்த தொடரில் அவர் நான்கு போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில், தான் சிறப்பாக பந்துவீசுவதற்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரின் நம்பிக்கைதான் காரணம் என பூனம் யாதவ் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் எனது முதல் பந்திலேயே நான் சிக்சர் கொடுத்தேன். அப்போது ஹர்மன்ப்ரீத் கவுர் என்னிடம், நம் அணியிலேயே மிகவும் அனுபவம் வாய்ந்த வீராங்கனை நீங்கள் தான்.
அதனால், நாங்கள் உங்களிடமிருந்து நல்ல ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம். அது, உங்களால் நிச்சயம் வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். அவரது ஆதரவு எனக்கு பெரிதும் உதவியது. கேப்டன் நம் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் நம்மால் கம்பேக் தர முடியும் என என்னிடம் நானே கூறி கொண்டேன்.
அதன் பலனாக அடுத்த பந்திலேயே நான் விக்கெட்டை எடுத்தேன். தற்போது இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், இந்தத் தருணத்தை நினைவுகூர்ந்தால், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது" என்றார். 28 வயதான பூனம் யாதவ் இதுவரை இந்திய அணிக்காக 66 டி20 போட்டிகளில் 94 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க:நான் விதியை நம்புபவள்... இந்திய வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி!