தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹோம் ஆப் கிரிக்கெட் முதல் மொடீரா வரை... - Home of Cricket

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை குடியரசுத் தலைவர் இன்று திறந்து வைத்துள்ள நிலையில், புகழ்பெற்ற மைதானங்கள் சிலவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்...

Motera
Motera

By

Published : Feb 24, 2021, 6:06 PM IST

கிரிக்கெட்டுக்கு இணையாக, இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என்பது தொடர் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது. இருப்பினும், இந்தியர்கள் கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். கிரிக்கெட் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத்தில் கட்டப்பட்டு, முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

நரேந்திர மோடி மைதானம்

இந்தியா, இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு, இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பரபரப்பான உலகக் கோப்பை காலிறுதிப் போட்டி இங்குதான் நடைபெற்றது. பின்னர், பழைய மைதானம் இடிக்கப்பட்டு புதிய மைதானம் கட்டப்பட்டது.

நரேந்திர மோடி மைதானம்

குஜராத்தின் சபர்பதியில் 800 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தின் கட்டுமானப் பணி 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கருப்பு மற்றும் செம்மண் மூலம் உருவாக்கப்பட்ட 11 கிரிக்கெட் பிட்சுகள் இந்த மைதானத்தில் உள்ளன. இந்தியாவின் மற்ற மைதானங்கள் போல் அல்லாமல், தூண்கள் இன்றி இது கட்டப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் போட்டியைக் காணலாம்.

மொடீரா மைதானம்

நாட்டிலுள்ள வேறெந்த மைதானத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த மைதானத்தில் 75 கார்ப்பரேட் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தைத் தவிர பயிற்சிக்காக இரு கிரிக்கெட் மைதானங்களும் இதில் உள்ளன. மேலும், இந்த மைதானத்தில் கிரிக்கெட் அகாதமி ஒன்றும் செயல்படவுள்ளது. மைதானத்துக்கு வெளியே ஒரே நேரத்தில் மூவாயிரம் கார்கள், பத்தாயிரம் இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஏதுவாக மாபெரும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் வடக்கு பெவிலியனுக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் பெயரும், தெற்கு பெவிலியனுக்கு அதானி குழுமத்தின் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டைத் தவிர கால்பந்து, ஹாக்கி, கோகோ, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளையும் இந்த மைதானத்தில் நடத்தலாம். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தை வடிவமைத்த L & T நிறுவனம்தான், இந்த மைதானத்தையும் வடிவமைத்துள்ளது.

'ஹோம் ஆப் கிரிக்கெட்'

உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் முதன்மையானது இங்கிலாந்திலுள்ள லார்ட்ஸ். 'ஹோம் ஆப் கிரிக்கெட்' என்றழைக்கப்படும் இந்த மைதானம், 1814ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேரிலேபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த தாமஸ் லார்ட்டின் நினைவாக அவரின் பெயர் இந்த மைதானத்திற்கு வைக்கப்பட்டது. உலகின் பழமையான விளையாட்டு அருங்காட்சியகம் இந்த மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1936ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது, இந்தியாவின் ஜஹாங்கிர் கான் வீசிய பந்தால் ஒரு குருவி உயிரிழந்தது. அச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டுள்ளது.

லார்ட்ஸ்

எம்சிஜி, ஆஸ்திரேலியா

கடந்த 1877ஆம் ஆண்டு, கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டியை நடத்திய பெருமை மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தையே சாரும். உலகின் இரண்டாவது மிகப் பெரிய மைதானமான இங்கு, ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஒரே சமயத்தில் போட்டியை கண்டுகளிக்கலாம். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரின் பல பரபரப்பான போட்டிகள் இங்குதான் நடைபெற்றன.

எம்சிஜி

கென்சிங்டன் ஓவல், மேற்கிந்தியத் தீவுகள்

கடந்த 1882ஆம் ஆண்டு கட்டப்பட்ட கென்சிங்டன் ஓவலில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில், புதுப்பிக்கப்பட்ட இந்த மைதானத்தில் 28 ஆயிரம் பார்வையாளர்கள் அமர வகைசெய்யப்பட்டுள்ளது. உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகளின் சர் கார்பீல்ட் சோபர்ஸூக்கு, இங்கு சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கென்சிங்டன் ஓவல்

ABOUT THE AUTHOR

...view details