ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஒன்பதாவது பிக் பேஷ் லீக் டி20 தொடரின், இன்றைய ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் பிஞ்ச் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹார்பர் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார். பின் கேப்டன் பிஞ்சுடன் ஜோடி சேர்ந்த ஷான் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மார்ஷ் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேற, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பிஞ்ச் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதன்மூலம் ரெனிகேட்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிஞ்ச் 50 ரன்களை எடுத்திருந்தார். ஹரிகேன்ஸ் அணி சார்பில் ஃபால்க்னர், எல்லிஸ், மெரிடித் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.