ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, சிட்னி சிக்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹரிகேன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் டி ஆர்சி ஷார்ட் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 51 ரன்களை விளாசினார்.
ஆனால் அந்த அணியை சேர்ந்த மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சிக்சர்ஸ் அணி தரப்பில் சீன் அபோட் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து வெற்றியை நோக்கி களமிறங்கிய சிக்சர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதத்தில் டேனியல், அணியின் கேப்டன் ஹென்ரிக்ஸ் ஆகியோர் 2 ரன்களில் வெளியேறினர். பின் மற்றொரு தொடக்க வீரரான பிலிப்பே 24 ரன்களில் பெவிலியன் திரும்ப சிகசர்ஸ் அணி தடுமாறியது.
பின்னர் களமிறங்கிய சிக்சர்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததால் அந்த அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஹரிகேன்ஸ் அணி சார்பில் அஹ்மத் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசிய அஹ்மத் ஆட்டநாயகனாத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:ஐபிஎல் ஏலம்: ட்விட்டரில் சிஎஸ்கே செய்த மீம்ஸ் குறும்பு!