இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் சௌவுதாம்டன் நகரில் நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.
அந்த அணியின் ஸாக் கிராலி இரட்டை சதமடித்தும், ஜோஸ் பட்லர் சதம் விளாசியும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின்னர் எட்டு விக்கெட் இழப்பிற்கு 583 ரன்களை குவித்திருந்த இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஃபாளோ ஆன் ஆனது.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய பாகிஸ்தான் அணி, ஒரு வழியாக ஐந்தாம் நாள் ஆட்டத்தையும் நிறைவு செய்து, போட்டியை டிரா செய்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மேலும் இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 600ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஆண்டர்சன் அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக முத்தையா முரளிதரன்(இலங்கை -800), ஷேன் வார்னே(ஆஸ்திரேலியா- 708), அனில் கும்ளே(இந்தியா-619) ஆகிய மூன்று சுழற்ப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
தற்போது அந்த வரிசையில் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன்னும் தன்னை இணைத்துக்கொண்டர்.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடர் : குறைந்தபட்சம் 50 வீரர்களிடம் ஊக்க மருந்து பரிசோதனை!