உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின்னர் பல்வேறு அணிகள் தங்களது பயிற்சியாளர்களை மாற்றிவருகின்றனர். அந்தவகையில் உலகக்கோப்பைத் தொடரில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான், அணியின் தலைமை பயிற்சியாளரை நீக்கிவிட்டு தற்போது அதற்கான தேடலை நடத்திவந்தது.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக், டீன் ஜோன்ஸ், மைக் ஹொசைன், வாக்கர் யூனிஸ் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா-உல்-ஹக்கையும், பந்துவீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்கர் யூனிஸும் நியமனம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மிஸ்பா-உல்-ஹக் பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளராகவும் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளராக மிஸ்பா-உல்-ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பந்துவீச்சு பயிற்சியாளராக வாக்கர் யூனிஸ் செயல்படுவார் எனவும், இவர்கள் இருவரும் மூன்றாண்டு ஒப்பந்தங்கள் அடிப்படையில் செயல்படுவார்கள்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.