தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதை!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதைகள் பற்றி பார்க்கலாம்.

harmanpreet-kaur-how-moga-girl-revolutionized-womens-cricket
harmanpreet-kaur-how-moga-girl-revolutionized-womens-cricket

By

Published : Feb 16, 2020, 6:40 PM IST

சரவ்தேச அளவில் பார்த்தால் இந்தியாவில் கிரிக்கெட் மதம் தான். ஆனால் அந்த மதம் ஆடவருக்கானது. மகளிர் கிரிக்கெட்டை நேரடியாக ஒளிபரப்புவதற்கே இங்கே ஆயிரம் பிரச்னைகள் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு 100 ஆண்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே தெருவில் எத்தனை பெண்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள் எனப் பார்த்தால், 0.001% தான் இருப்பார்கள்.

1983ஆம் ஆண்டுக்கு முன்னால் ஆடவர் கிரிக்கெட்டின் நிலையும் இப்படிதான் இருந்தது. கபில் தேவ் உலகக்கோப்பையைக் கைப்பற்றிய பின் தான் ஒவ்வொரு இளைஞர்களும் சிறுவர்களும் கிரிக்கெட் மீது ஈர்ப்பு கொண்டு வெளிவரத்தொடங்கினர். ஆனால் அதற்கு ஒரு ஆட்டத்திற்கு முன்னதாகவே கபில் தேவ் அடித்த 175 ரன்கள் அடித்த இன்னிங்ஸ்தான் இந்தியாவின் பலரையும் சென்றுசேர்ந்தது. அதுபோன்ற ஒரு இன்னிங்ஸ்தான் 2017ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியின் இளம் வீராங்கனையிடம் இருந்து வெளிப்பட்டது.

சிக்சர் விளாசும் ஹர்மனின் ஸ்டைல்

2017, ஜூலை 20. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டிய நாள். மகளிர் உலகக்கோப்பைத் தொடரில் டிபெண்டிங் சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி அரையிறுதியில் மோதியது. அந்த கால ஆடவர் ஆஸ்திரேலிய அணியைப் போலதான் இப்போதைய ஆஸ்திரேலிய மகளிர் அணி. ஐசிசி தொடர்களில் அவர்களை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல.

ஆனால் இந்திய ஆடவர் அணியும் சரி, மகளிர் அணியுன் சரி. எங்கே ஆதிக்கம் அதிகமாக இருக்கிறதோ அங்கே சென்று சிக்சர் அடிப்பதுதான் வழக்கம். டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்ய, மழையின் காரணமாக ஆட்டம் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணி 35 ரன்களுக்குள் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா - பூனம் ராவத் ஆகியோரை இழந்தது. மூன்றாவது வீராங்கனையாக வந்த கேப்டன் மிதாலி ராஜ் உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்தார்.

இரு வீராங்கனைகள் பொறுப்புடன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்களில் இந்திய அணி 70 ரன்கள் எடுத்தது. ரன் ரேட் 4 ரன்களிலேயே செல்ல, 25ஆவது ஓவரில் பீம்ஸ் பந்தில் கேப்டன் மிதாலி ராஜ் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிட்டத்தட்ட அணியின் நம்பிக்கை மொத்தமாகவே தகர்ந்தது.

ஹர்மன்ப்ரீத்

ஆனால் அதற்கு பதிலடியாக பீம்ஸ் வீசிய 27ஆவது ஓவரில் சிக்சர், பவுண்டரி என அடுத்தடுத்து அடித்து ஸ்டைலாக அரைசதத்தை ஹர்மன் கடந்தார். அதன் பின் முழுக்க முழுக்க ஹர்மன் காட்டியது வான வேடிக்கைகள். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி, சிக்சர் என விளாச, 90 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். 64 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்மன், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து மகளிர் கிரிக்கெட்டின் மகத்துவத்தை அறிய வைத்தார்.

அதோடு அந்த இன்னிங்ஸ் நிற்கவில்லை. ஆஸ்திரேலிய வீராங்கனை கார்டனர் வீசிய 37ஆவது ஓவரில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உட்பட 22 ரன்களை விளாசினார். அதில் ஒரு சிக்சர் 95 மீட்டர்களைக் கடந்து மைதானத்தின் மேல் சென்று விழுந்தது. ஆஸ்திரேலிய அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களின் அனைத்து பந்துகளுக்கும் மரியாதையின்றி சிக்சர்கள் பறக்கவிட்டார். இறுதியாக இந்திய அணி 42 ஓவர்கள் முடிவில் 281 ரன்களை எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்களை எடுத்தார். அதில் 20 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடிய ருத்ர தாண்டவம்

இவரின் இன்னிங்ஸைப் பார்த்து ஆஸ்திரேலிய அணியின் ஆடம் கில்கிறிஸ்ட், உலகின் முக்கிய ஹிட்டர்களில் ஹர்மன் அதிமுக்கியமானவர் என பாராட்டினார். அன்றைய நாள் மகளிர் கிரிக்கெட்டின் சரித்திரம் மாறியது. இதனையறிந்த இந்திய மக்கள், ட்விட்டரில் வாழ்த்துகளை தெறிக்கவிட, அந்த ஆண்டிலேயே அதிகமாக பகிரப்பட்ட ஹேஸ்டாக் ஹர்மன் ப்ரீத்கவுர் ஆனது.

மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு பெரும் பிரச்னை என்னவென்றால் அவர்கள் சிறுவயதில் ஆடவர் அணியுடன்தான் பயிற்சிகளை மேற்கொள்ள முடியும். மாவட்டத்தில் எத்தனை மகளிர் கிரிக்கெட்டர்கள் இருக்கிறார்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுபோல்தான் பஞ்சாப்பின் மோகா மாவட்டத்தில் பிறந்த ஹர்மன் ப்ரீத் கவுரும். குரு நானக் என்ற கல்லூரி மைதானத்தில் 15 வயதேயான ஹர்மன் ப்ரீத்தின் கிரிக்கெட்டைப் பார்த்து நடைபயிற்சிக்கு சென்றபோது அசந்துபோனவர்களில் ஒருவர் சோதி.

ஹர்மன்ப்ரீத் கவுரின் ஆட்டத்தைப் பார்த்து வியந்து அதனை கிரிக்கெட் பயிற்சியாளரான தனது மகன் யத்விந்தர் சிங்கிடம் சோதி சொல்கிறார். அங்கிருந்து உடனடியாக ஹர்மன்ப்ரீத் கவுரின் அப்பாவிடம் பேசுகிறார்கள். இறுதி முடிவாக, உங்கள் மகளை எங்களிடம் கொடுங்கள். அவளுடைய கிரிக்கெட், கல்வி, சாப்பாடு, தங்குமிடம் என அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதற்கு ஹர்மனின் அப்பா சின்ன பயத்துடன் ஒப்புக்கொள்கிறார்.

ஹர்மன்

அங்கிருந்து இரண்டு ஆண்டுகளில் தேசிய அணிக்கும், அடுத்த இரண்டே ஆண்டுகளில் இந்திய அணியிலும் ஹர்மன் இடம்பெறுகிறார். 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஹர்மன் களமிறங்கினார்.

ஹர்மன்ப்ரீத் கவுரைப் பார்த்து இன்று மோகா மாவட்டத்தில் பல்வேறு மாணவர்களும், பெண்களும், குழந்தைகளும் அவரைப் போல் ஆடவேண்டும் என்று விளையாட்டினைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஹர்மன் ப்ரீத் கவுருக்கு முன்னால் அந்த ஊரில் பலரும் கிரிக்கெட் ஆடியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் செய்யாததை கவுர் சாதித்தார். அந்த ஒரு சாதனை பஞ்சாப்பிலிருந்து மகளிர் கிரிக்கெட்டர்கள் உருவாவதை அதிகமாக்கியுள்ளது. இதுவரை முதல்தர கிரிக்கெட்டுக்கு மோகாவிலிருந்து 9 வீராங்கனைகளும் , நான்கு வீராங்கனைகள் 19 வயதுகுட்பட்டோருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இவையனைத்திற்கும் ஹர்மனின் வெற்றிதான் முக்கியக் காரணம்.

இன்னும் சில நாள்களில் பாஞ்சாப்பில் சென்று பார்த்தால் தெருவுக்கு தெரு மகளிர் கிரிக்கெட்டர்களை கொண்டுவரலாம். அதற்கு 1983ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணி வென்றதைப் போன்ற ஒரே ஒரு வெற்றிதான் தேவை. அந்த வெற்றியை பெறுவதற்கு சரியான வாய்ப்பும் அமைந்துள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர்

இன்னும் 5 நாள்களில் மகளிர் கிரிக்கெட்டுக்கான டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மகளிர் கிரிக்கெட்டில் மிதாலியைக் கடந்து, வேறு வீராங்கனைகளின் பெயர் கூட யாருக்கும் தெரியாது. ஆனால் இன்று மகளிர் கிரிக்கெட்டில் ஆடவருக்கு இணையான நட்சத்திரங்களாக வீராங்கனைகள் தங்களை மேம்படுத்திக்கொண்டுள்ளனர். ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா என இந்திய அணி வலிமையாக உள்ளது. அவர்கள் அனைவருக்கும் தலைமையேற்று ஹர்மன் ப்ரீத் வழிநடத்தவுள்ளார்.

முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ்

ஒவ்வொரு முறையும் டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தும் ரசிகர்கள், இந்த டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாகவே ஆர்வமாக உள்ளனர். கிரிக்கெட் ஆடும் நாடுகளில் இந்தியாவை தவிர்த்து ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் வெறும் 56.7 கோடிதான். ஆனால் இந்தியாவிலோ 135.4 கோடி பேர் ஒரு கிரிக்கெட் போட்டியை ரசிக்கிறார்கள். ஆக இந்திய அணி நன்றாக ஆடினால், மகளிர் கிரிக்கெட் உச்சத்திற்கு சென்று மகளிர் கிரிக்கெட்டர்களும் கொண்டாடப்படுவார்கள். வரும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கலாம்...!

ABOUT THE AUTHOR

...view details