முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. எப்போதும் மைதானத்தில் துடிப்பாக இருக்கும் இவர் முதுகு வலியால் அவதியுற்றது அவரது ரசிகர்களை கவலையடையச் செய்தது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து தற்போது மைதானத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளதாக அறிவித்துள்ளார் பாண்டியா.
அறுவை சிகிச்சை முடிந்து, குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வுக்குப் பிறகே மீண்டும் சர்வதேச ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்பார் என முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மைதானத்துக்குத் திரும்பி பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கு வந்து நீண்ட நாளாகிவிட்டது. மைதானத்துக்குத் திரும்புவதை விடவும் வேறு நல்ல உணர்வு கிடையாது" என்று தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு, இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
26 வயது நிரம்பியுள்ள பாண்டியா 11 டெஸ்டு, 54 ஒரு நாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கவில்லை.
இதையும் படிங்க: 'ஹர்திக் பாண்டியாவை விட சிறந்த ஆல் ரவுண்டர் ஹிட்மேன்தான்' - ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியல்!