திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில், சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் விழுந்த அச்சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. இந்தப் பணிகளில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே சிறுவன் சுஜித்தை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று #SaveSurjith என்ற ஹேஸ்டாக் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டானது. அதைத் தொடர்ந்து நடிகர்கள் விவேக், சேரன், சரத்குமர், ஜி.வி. பிரகாஷ் ஆகியோரும் சுஜித் மீண்டு வருவதற்காக டவீட் செய்தனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனும் சுஜித்தின் மீட்புப் பணிகள் வெற்றியடைய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கும் இன்று சுஜித்திற்காக ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது. அந்த குழந்த உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ. தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி. எழுந்து வா தங்கமே. வேதனையோடு ஒரு தீபாவளி'' என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், ‘நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய். பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி. விழித்துக்கொள் தேசமே’ என்று பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் இதுபோன்று ஆதரவு தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சுஜித்திற்காக அவர் தற்போது பதிவிட்டுள்ளார்.