இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் அசெஸ் ஃபிலிம் ஃபேக்டரி வழங்கும் பேச்சுலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பேச்சுலர்னா ஜம்முனு இருக்கலாம், அப்போ கமிட் ஆனவங்க? - என்ன சொல்கிறார் ஹர்பஜன் - ஹர்பஜன் சிங் ட்வீட்
ஜி.வி. பிரகாஷின் ‘பேச்சுலர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், "கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்...🤫, கமிட் ஆனா உம்முனு இருக்கனும்...🙇 பேச்சுலர்னா ஜம்முனு இருக்கலாம்...😎!" என்றும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும் தமிழில் பதிவிட்டிருந்தார். வழக்கம் போல ஹர்பஜன் சிங்கின் இந்தப் பதிவும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய அணிக்காக 103 டெஸ்ட், 236 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 600க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேபோல், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் 160 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர், கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவதிலிருந்து தமிழில் ட்வீட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.