கிரிக்கெட் விளையாட்டிற்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு. இதனை யாராலும் 100% சரியாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதுமை இருந்துகொண்டே இருக்கும்.
உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் இசை, எழுத்து, இலக்கியம், விளையாட்டு என ஏதேனும் ஒரு அடையாளம் இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட் இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அந்த அடையாளம் வருவதற்கு மிக முக்கியக் காரணம் சச்சின் டெண்டுல்கர்.
அனைத்துத் துறைகளிலும் கண்டிப்பாக ஜாம்பவான்கள் இருக்கத்தான் செய்வார்கள், கிரிக்கெட்டைப் பொறுத்தவரை என்றும் சச்சினே மாபெரும் ஜாம்பவானாகத் திகழ்வார் என்றால் அதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது. அவர் விட்டுச்சென்ற இடத்தை விராட் கோலி நிரப்பிவிட்டார். இருந்தும் சச்சின் கொண்டாடப்படுவதற்கு காரணம், அவர் கொடுத்த உணர்வுகள்.
வாழ்க்கையில் துவண்டுபோனவர்களுக்கு சச்சின் என்றுமே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி. இவரது ஆட்டத்தையும் போராட்ட குணத்தையும் பார்த்து வாழ்க்கையில் பிடிமானம் வரவழைத்துக் கொண்டவர்கள் ஏராளம்.
கிரிக்கெட்டைப் பார்க்காதவர்களுக்கும், அறியாதவர்களுக்கும்கூட சச்சினைத் தெரியும். வளரும் நாடான இந்தியாவில் கிரிக்கெட் விளையாடாத இளைஞர்களே இல்லை.
ஒரு மனிதன் தனது கனவை அடைவதற்காக 22 ஆண்டுகள் தொடர்ந்து ஓடுவானா என்ற கேள்விக்கு தனது சிறப்பான செயல்பாடுகள், அர்ப்பணிப்புகள் மூலம் பதில் கொடுத்தவர்.
1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்தியா அடைந்த தோல்விகளை அவ்வளவு எளிதாக எந்த மனிதராலும் கடந்துபோக முடியாது. ஆனால் இவையனைத்தையும் கடந்துவந்து 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றது.
சச்சினின் ஒவ்வொரு இன்னிங்ஸுமே அவரது ரசிகர்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். ஆனால் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சச்சின் ஆடிய 241* இன்னிங்ஸை அவரது ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள். கிரிக்கெட் வாழ்வில் சச்சின் பார்க்காத பந்துவீச்சாளர்களே கிடையாது.
அப்துல் காதிர் பந்தில் டவுன் தி ட்ராக் சிக்சர் அடித்ததில் தொடங்கி வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ஆலன் டொனால்ட், அக்தர், வார்னே, முரளிதரன், மெக்ராத், பிரட் லீ, பொல்லாக், ஆண்டர்சன், ஸ்டெயின், இம்ரான் கான், ஆம்ப்ரோஸ், ஷேன் பாண்ட், கில்லெஸ்பி, வால்ஷ், டேரன் காஃப், காஸ்ப்ரோவிச், வாஸ் என அடிக்காத பந்துவீச்சாளர்களே கிடையாது.
இந்தப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை அசால்ட்டாக டீல் செய்த சச்சினுக்கு, 2004 பார்டர் - கவாஸ்கர் தொடர் அவ்வளவு எளிதாக அமையவில்லை.
ஆனால் இந்தியாவின் கேப்டன் கங்குலி, டிராவிட், லக்ஷ்மண், சேவாக் என அனைவரும் அந்தத் தொடரில் சதம் அடித்துவிட்டார்கள். அதிலும் எதிரணியில் சச்சினின் போட்டியாளர் எனப் பார்க்கப்பட்ட பாண்டிங் இரட்டை சதத்தை இருமுறை அடித்திருந்தார். மூன்று போட்டிகள் முடிவடைந்தது. நான்காவது போட்டிக்கு முன்னதாக வழக்கம்போல் சச்சின் மீதான விமர்சனங்கள் அதிகமாகவே எழுந்தன.
அந்தத் தொடரில் ட்ரைவ் ஷாட்கள் ஆடும்போதெல்லாம் விக்கெட்டை விட்ட சச்சின், நான்காவது போட்டியில் ட்ரைவ் ஆடக்கூடாது என்னும் உறுதியோடு இருந்தார்.
அந்த ஆட்டத்தில் 10 மணி நேரம் களத்திலிருந்த சச்சின், எந்தவொரு பந்தையும் சாதாரணமாக எதிர்கொள்ளவில்லை. கில்லெஸ்பி, பிராக்கன், லீ, மெக்கில், ஸ்டீவ் வாஹ், கேடிச், மார்டின் என யார் பந்துவீசியும் சச்சினின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.