கிரிக்கெட்டில் அறிமுகமாகும்போது ஒரு வீரர் எந்த அளவிற்கு ரசிகர்களுக்கும், அணி நிர்வாகத்தினருக்கும் நம்பிக்கையளிக்கிறாரோ அதே நம்பிக்கையில் அவருக்கு அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளிக்கும். ஆனால் இந்த வீரருக்கு ரசிகர்களை ஈர்க்கும் முகமோ, அதிரடியான ஆட்டமோ தொடக்கக் காலத்தில் இல்லை. ஆனால் அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் இவர் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. எதிர்காலத்தில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கப் போகிறார் என்று...
2007 டி20 உலகக்கோப்பை, ஆஸ்திரேலிய முத்தரப்பு ஒருநாள் தொடர் என சில போட்டிகளில் நன்றாக ஆடியிருந்தாலும் ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தான் சுரேஷ் ரெய்னா தலைமையில் இளம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸிற்கு பயணம் மேற்கொண்டது. விராட் கோலி இந்திய ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டிருந்த சமயம்.
ஆனால் ரோஹித் ஷர்மா என்ற இளம் வீரரை ரசிகர்கள் அந்தத் தொடரில் தான் அடையாளம் கண்டுகொண்டார்கள். விளையாடிய 5 போட்டிகளில் மூன்று அரைசதம். அதிலும் மூன்றாவது போட்டியில் ஹர்பஜன் சிங், பிரவீன் குமாருடன் இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று தன் திறமையை அனைவரும் அறிய வைத்தார். இதைப்பற்றி முன்னாள் இந்திய பயிற்சியாளர் டன்கன் ப்ளெட்சர், ''ரோஹித்தின் இந்த இன்னிங்ஸ் அற்புதமானது. 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த பின், ஆட்டமிழக்காமல் டெய்லண்டர்களுடன் ரோஹித் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டராக முதிர்ச்சியை வெளிப்படுத்தியத் தருணம்'' என்றார்.
அந்தத் தொடருக்கு முன்னதாக உலகக்கோப்பை அணியில் இடம்கிடைக்காத விரக்தியில் ரோஹித் ஷர்மா இருந்தார். அவரிடமிருந்தும் சில ட்வீட்கள் வந்தன. உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, எல்லாரும் நல்ல அணி என பாராட்டிக்கொண்டிருந்தனர். நண்பன் ஒருவன், ''Rohit Sharma Deserves Place in the WorldCup Squad'' என்று சொல்லி முடிக்கும் முன் அனைவருமே சிரித்துக்கொண்டிருந்தோம்.
ஆனால் ரோஹித் ஷர்மாவின் அண்டிகுவா இன்னிங்ஸ் எங்களின் சிரிப்பை மாற்றி அனைவரின் கண்களையும் அவரை நோக்கி கொஞ்சம் கூர்மையாக கவனிக்க வைத்தது. ஆனால் ரோஹித் ஷர்மா அப்போதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். ஆனால் ஒரே ஒரு முடிவு ரோஹித்தின் வாழ்க்கையையும், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தையும் மொத்தமாக மாற்றியது.
இந்திய அணிக்குள் சேவாக் நுழைந்திருந்தபோதும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். அவர் நல்ல கிரிக்கெட்டர் என்பதால் கங்குலி ஒரு வாய்ப்பு கொடுத்தார். அது, அணியில் அனைத்து இடங்களுக்கும் வீரர்கள் சரியாக இருக்கிறார்கள். உனக்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு தொடக்க வீரராக களமிறங்கி நன்றாக ஆடுவது மட்டும் தான். சேவாக்கிற்கு வேறு வழியில்லை. தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால் அன்று சேவாக்கிற்கு பதிலாக கங்குலி எடுத்த முடிவு இந்திய கிரிக்கெட்டை அணியின் முகத்தை மாற்றியது. அன்று தொடக்க வீரராக களமிறங்கிய சேவாக், வாழ்க்கையில் எந்த போட்டியிலும் வேறு இடத்தில் களமிறங்கவே இல்லை. கடைசி வரை தொடக்க வீரர் தான்.
இதேபோல் தான் ரோஹித்திற்காக தோனியும் கங்குலி எடுத்த அதே முடிவை எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர். கம்பீர் - ரஹானே இணை தொடக்கத்தில் சொதப்ப, பெஞ்சில் இருந்த ரோஹித்திற்கு தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கிறது. முதல் போட்டியிலேயே 83 ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆட்டம் முடிந்த பின் ரோஹித் பற்றி பேசிய தோனி, ''அவரின் திறமைக்கு ரன்கள் சேர்க்கவில்லை என்றால் அது அவருக்கு அவமானம். பெரிய ரன்களை எளிதாக எடுக்கக் கூடிய வீரர்'' என்று சுருக்கமாகப் பாராட்டினார்.
அங்கிருந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர். விஜய், ரஹானே, தினேஷ் கார்த்திக், தவான் ஆகியோரில் யாரைத் தொடக்க வீரராக சேர்க்கப் போகிறார் எனத் தெரியவில்லை. தோனியைத் தவிர்த்து அனைவருமே அனுபவமில்லாத வீரர்கள். பயிற்சி ஆட்டங்களில் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக்கிற்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டது. தொடரில் தவானுடன் ரோஹித் சர்மா தான் தொடக்கம். அந்தத் தொடரில் தொடக்க வீரராக ஜொலிக்கத் தொடங்கிய ரோஹித், அதன்பின் எங்குமே சறுக்கவில்லை.
தொடக்கக் காலத்திலிருந்து ரோஹித் எப்போதும் சுறுசுறுப்பின்றி இருக்கிறார் என்ற விமர்சனம் ரசிகர்களிடமிருந்து வரும். அவர் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என முகத்தில் விராட் கோலியைப் போல் காட்ட வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் அவரோ முகத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டுவதற்கு பதிலாக தனது பேட்டில் ஆக்ரோஷத்தைக் காட்டத் தொடங்கினார்.
சில வீரர்கள் 50 ரன்கள் எடுத்தால் சதம் விளாச வேண்டும் என ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் ரோஹித் ஷர்மா 50 ரன்களைக் கடந்துவிட்டாலே, ''இன்னிக்கு ஒரு 200 இருக்கு'' என ரசிகர்கள் தொலைக்காட்சி முன்பு அமர்வார்கள். இத்தனை ஆண்டுகளில் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இதுதான்.