1999ஆம் ஆண்டு, சூதாட்ட புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியிக்கு அது இருண்ட காலம். அஸாரூதீன், அஜய் ஜடேஜா ஆகிய முக்கிய வீரர்கள் சூதாட்ட புகாரில் சிக்கியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் அணியை எங்கு சென்றாலும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இந்திய அணி மீதான சூதாட்ட புகாரால் அப்போதைய பயிற்சியாளர் கபில் தேவ், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பாதாளத்தை நோக்கி செல்கிறது என்ற விமர்சனங்கள் பட்டித்தொட்டி எல்லாம் எழத்தொடங்கியது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு 'கல்கத்தாவின் இளவரசன்' என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியிடம் வந்தது. இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும், இந்திய கிரிக்கெட்டின் ஆட்ட முறையை மாற்ற வேண்டும், உடல் மொழியை மாற்ற வேண்டும், எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை யாரும் அசைக்க முடியாத சக்தியாக மாற்ற வேண்டும் என நினைத்து கேப்டன் பதவிக்கு வந்த கங்குலிக்கு சூதாட்ட புகார்கள் மிகப்பெரிய ஏமாற்றம்.
சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு போட்டியாக ஆக்ரோஷத்திலும், பேட்டிங்கிலும் வலம் வந்தவருக்கு இந்திய கிரிக்கெட்டை மீட்க கேப்டன்சி என்னும் ஆயுதத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் கங்குலியிடம் கொடுத்தது. இருப்பினும் அந்த சமயத்தில் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்தது. சச்சின், டிராவிட், லக்ஷ்மண், கும்ப்ளே, ஸ்ரீநாத் என சிறந்த வீரர்கள் இருந்தாலும் சொந்த நாட்டிலேயே தோல்வியை தான் சந்தித்துகொண்டிருந்தது. அந்த சூழ்நிலையில் கங்குலி யாரும் எதிர்பாராத ஒரு முடிவாக இந்திய அணிக்குள் இளம் வீரர்களை கொண்டுவர முடிவு செய்தார். அவருக்கு உதவியாக ஜான் ரைட், டால்மியா, துணை கேப்டனாக டிராவிட் என அனைவரும் உடனிருந்தனர்.
மக்களிடம் இந்திய அணி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்ததால், ஆஸ்திரேலியாவை விளையாட அழைக்க நேரிட்டது. இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கும்ப்ளே, ஸ்ரீநாத் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. ஆனால் இதனை முன்கூட்டியே கணித்த கங்குலி ஹர்பஜனை பற்றி கேள்வி பட்டு, கும்ப்ளேவிடம் பயிற்சி பெற வைத்ததால் அணியில் ஹர்பஜன் இடம்பெற வேண்டும் என விரும்பினார். ஆனால் தேர்வாளர்கள் கங்குலியின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர். அப்போது கங்குலி, ஹர்பஜன் பெயர் இந்திய அணியில் இடம்பெற்றால் தான் இந்த இடத்தைவிட்டு வெளியேறுவேன் என தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் கங்குலி கேப்டன்சி மீதான கேள்விகள் எழத் தொடங்கியது.
அப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி. முன்னாள் வீரர்களின் விமர்சங்கள் அதிகமாகின. இதையடுத்து இரண்டாவது போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, 'கொல்கத்தா எனது கோட்டை, என் ஊரில் எங்களை வெல்ல முடியாது' என கர்ஜித்தார். அவர் கூறியதைப் போலவே, லக்ஷ்மண், டிராவிட் ஆடிய ஆட்டம் இந்திய அணியை காப்பாற்றியது என்று சொன்னால், ஹர்பஜன் சிங் எடுத்த ஹாட்ரிக் விக்கெட்டுகள் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. அந்த தொடரில் ஹர்பஜன் சிங் 32 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் கங்குலியின் தேடல் அதிகமானது. அதனையடுத்து யுவராஜ் சிங் என்னும் இளம் காளையை அணிக்குள் கவனமாக காப்பாற்றி வந்தார். இந்திய அணியில் பெரிதாக ஃபீல்டர்கள் இல்லை, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லை என பேசியவர்கள் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தைப் பார்த்து பிரமித்து போனார்கள்.
ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியா மனப்பான்மையுடன் ஆடும் யுவியைக் கண்டு கிரிக்கெட் உலகம் அதிர்ந்தது. பின்னர் முகமது கைஃப், சேவாக் என இந்திய அணியின் அடுத்தடுத்து படைப்புகளாக கங்குலியின் கேப்டன்சியில் பிரவேசித்தனர். உலகின் தலைசிறந்த கேப்டனாக அரியப்படும் ஸ்டீவ் வாஹ், பாண்டிங்கும் கூட கங்குலியின் கேப்டன்சியை கண்டு பிரமித்துபோனார்கள்.