இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி பயிற்சியின் போது முழங்காலில் காயமடைந்துள்ளார்.
இதன் காரணமாக இங்கிடி, இங்கிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கபது சந்தேகம் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் மருத்துவ அதிகாரி ஷூயிப் மஞ்ச்ரா கூறுகையில், நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது அவரின் முழங்கால் எழும்பில் காயம் ஏற்பட்டது. மேலும் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்தபோது அவரின் காயம் மோசமடைந்ததையடுத்து, ஜனவரி மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். இதனால் இவர், வரும் 25ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க டி20 தொடரான மசான்சி சூப்பர் லீக் தொடரின் ஷ்வானே ஸ்பார்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிடி, நாளை நடக்கவுள்ள இறுதிப் போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இளம் வீரர்களால் தப்பித்த இந்திய அணி!