ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரரும், அந்த அணியின் கேப்டனுமான ஹமில்டன் மசகட்சா எதிர்வரும் வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரோடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறும் முடிவை அறிவித்துள்ளார்.
இதுவரை ஜிம்பாப்வே அணிக்காக 38 டெஸ்ட், 209 ஒருநாள், 62 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ள இவர், 10 சதங்கள் மற்றும் 52 அரைசதங்களுடன் என ஒன்பதாயிரத்து 410 ரன்களை அடித்துள்ளார்.
தற்போது 36 வயதாகும் ஹமில்டன் மசகட்சா அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட்டில் அரசின் தலையீடு அளவுக்கதிகமாக இருந்ததால் அந்நாட்டு கிரிக்கெட்டுக்கு ஐசிசி இடைக்கால தடை விதித்தது. இதனால் இனிவரும் ஐசிசி தொடர்களில் அந்த அணி பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே தடையினால் அந்த அணியின் சாலமன் மைர் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது அந்த அணியின் கேப்டன் ஹமில்டன் மசகட்சாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது.