இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகிய போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தத் தொடரில் முன்னணி வீரர்களான ஹசன் அலி, முகமது ஆமிர், ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளனர். இதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீரர்களின் தேர்வில் யு-19 அணிக்காக ஆடிய ஹைதர் அலி பாகிஸ்தான் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் சார்பாக பேசுகையில், '' மார்ச் மாதத்திலிருந்து எந்தவொரு அணியும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காததால் நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கல் குழுவில் இணைந்துள்ள யூனிஸ் கான், முஷ்டாக் அஹமது ஆகியோரிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி விவரம்: அஸார் அலி (டெஸ்ட் கேப்டன்), பாபர் அஸாம் (ஒருநாள், டி20 கேப்டன்), ஆசாத் ஷஃபீக், இமாம் உல் ஹக், ஃபக்கர் சமான், அபித் அலி, ஷான் மசூத், ஃபவாத் ஆலம், ஹைதர் அலி, இஃப்திகார் அஹமது, முஷ்தில் ஷாம் முகமது ஹஃபீஸ், சோயப் மாலிக், முகமது ரிஸ்வான், சர்ஃப்ராச் அஹமத், ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ராவ்ஃப், இம்ரான் கான், முகமது அப்பாஸ், முகமது ஹஸ்னைன், நசீன் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, சோஹல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ், இமாத் வாசிம், காசிஃப், ஷடாப் கான், யஷீர் ஷா.