உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் நீக்கப்பட்டு, குல்புதீன் நைய்ப் கேப்டனாக நியமிக்கப்பட்டார். உலகக்கோப்பைத் தொடரிலிருந்து பரிதாபமாக தோல்வியடைந்து வெளியேறியது. இதையடுத்து இளம் வீரர் ரஷீத் கான் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். தற்போது மீண்டும் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 மாதங்களில் மூன்று கேப்டன்களை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வீரர்கள் பலரும் அமைத்து காத்து வந்த நிலையில், முதன்முறையாக முன்னாள் கேப்டன் குல்புதீன் நைய்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ''நான் ஏன் இதுவரை இந்த மாஃபியா குழுக்கள் பற்றி வாய்திறக்கவில்லை என கேட்பீர்கள். ஆனால் தற்போது வரை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலவி வரும் குழப்பங்களை உடனடியாக முழுமையாக தீர்ப்போம் என எனக்கு உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த பிரச்னையிலும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அரசு உயர் மட்ட அலுவலர்கள், கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் என அனைவரின் பெயர்களையும் வெளியிடுவேன்'' என்றார்.