2019ஆம் ஆண்டுக்கான குளோபல் டி20 தொடர் கனடாவின் ஒன்டாரியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில், கிறிஸ் லின், டுமினி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த வின்னிபேக் ஹாக்ஸ் அணியும், ஆண்ட்ரே ரஸல் இருக்கும் வான்கோவர் நைட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வின்னிபேக் அணியின் தொடக்க வீரர் ஷாய்மன் அன்வரின் அதிரடியால் 20 ஓவர்களில் 192 ரன்களை அந்த அணி குவித்தது. இதில், அதிபட்சமாக ஷாய்மன் அன்வர் 8 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என 92 ரன்கள் விளாசினார்.
இதைத் தொடர்ந்து, 193 ரன்கள் இலக்குடன் ஆடிய வான்கோவர் நைட்ஸ் அணி 7.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்த நிலையில், கேப்டன் சோயப் மாலிக் அதிரடியாக ஆட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வான்கோவர் அணி 16.5 ஓவர்களில் 139 ரன்களை எடுத்திருந்த நிலையில், மாலிக் 64 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடி வீரர் ரஸல் களமிறங்கினார். 18, 19 ஆவது ஓவர்களை எதிர்கொண்ட அவர், பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு மொத்தம் 36 ரன்களை சேர்த்தார். இதனால், கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது நோபால், சிக்சர், விக்கெட் என எதிர்பார்க்காத பல திருப்புமுனைகள் ஏற்பட்டது. ஆம், கலிம் சனா வீசிய கடைசி ஓவரின் இரண்டாவது பந்தை ரஸல் சிக்சர் அடிக்க, பின்னர் மூன்றாவது பந்தை கலிம் சனா நோபாலாக வீசினார். இதனால், ஃப்ரிஹிட் பந்தை ரஸல் மீண்டும் சிக்சருக்கு பறக்கவிட வான்கோவர் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று பந்துகளில் மூன்று ரன் தேவைப்பட்டது.
சிக்சருக்கு பந்தை பறக்கவிட்ட ரஸல் ஆனால், அடுத்தடுத்த இரண்டு பந்தையும் ரஸல் வீணடிக்க கடைசி பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மூன்றாவது ரன் எடுக்க முயற்சித்தபோது நான் ஸ்ட்ரைக்கர் சஃபார் அவுட் ஆனார். இதனால், வான்கோவர் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 192 ரன்களை எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. ரஸல் 20 பந்துகளில் 46 ரன்களை அடித்தார்.
இதைத்தொடர்ந்து, சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த வான்கோவர் நைட்ஸ் அணி ஒன்பது ரன் மட்டுமே எடுத்தது. ரஸல் ஒரு சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார்.
பின்னர், 10 ரன்கள் எடுத்தால் வெற்றியுடன் வின்னிபேக் அணியில் கிறிஸ் லின், ஷாய்மன் அன்வர் களமிறங்கினர். ரஸல் வீசிய சூப்பர் ஓவரின் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே தந்தார். ஆனால், மூன்றாவது பந்தை விக்கெட் கீப்பர் பிடிக்கத் தவறியதால் பந்து பவுண்டரிக்கு சென்றது. பின்னர், அடுத்த பந்தில் லின் பவுண்ட்ரி அடிக்க வின்னிபேக் ஹாக்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது.