90ஸ் கிட்ஸ்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் பிடித்த பந்துவீச்சாளரான ஜாகிர் கான் நேற்று தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்தை கூறினர். அந்த வகையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், ஜாகிர் கானுக்கு பிறந்தாள் வாழ்த்துகூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துகள் ஜாகிர் கான், நமக்குள் ஏற்பட்ட மறக்க முடியாத தருணங்களை தந்ததற்காக மிக்க நன்றி எனக் குறிப்பிட்டிருந்தார்.
கிரேம் ஸ்மித்தின் இந்தப் பதிவு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில், ஜாகிர் கான் பந்துவீச்சில், கிரேம் ஸ்மித் பலமுறை பெவிலியனுக்கு நடையைக் கட்டியுள்ளார். இதுவரை 25 முறை இவர்கள் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில், 13 முறை கிரேம் ஸ்மித், ஜாகிர் கான் பந்துவீச்சில்தான் ஆட்டமிழந்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில், ஜாகிர் கான் குறிப்பிட்ட பேட்ஸ்மேன்களை அதிகமுறை அவுட் செய்த பட்டியலில் கிரேம் ஸ்மித்தான் முதலிடத்தில் உள்ளார். இதனால், இவர்களுக்குள் விளையாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து அவர் மீண்டும் நினைவுகூர்ந்துள்ளார்.