கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறவிருந்த நிலையில், காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீண்டும் கிரிக்கெட் தொடர்கள் தொடங்கும் போது, ரசிகர்களை அதிகளவில் ஈர்க்க வேண்டிய தேவை உள்ளது.
அதேபோல் கரோனா வைரஸிற்கு பின் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் வருவாய் வரும் வகையில் கிரிக்கெட் தொடர்பான முடிவுகள் ஐசிசி எடுக்கவேண்டும். இதனிடையே ஐசிசி தலைவர் பதவிக்கு ஜூலை மாதத்தில் தேர்தல் வரவுள்ளது.
தற்போது தலைவராக இருக்கும் ஷாஷங்க் மனோகரின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவுக்கு வர உள்ள நிலையில், புதிய ஐசிசி தலைவர் பதவிக்கு யாரெல்லாம் வேட்புமனு தாக்கல் உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இயக்குநருமான கிரேம் ஸ்மித் கங்குலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''இந்த நேரத்தில் ஐசிசியின் தலைவர் பதவிக்கு தலைமை பண்பு மிக்க ஒருவர் வருவது மிகமுக்கியத் தேவையாக உள்ளது. கரோனா வைரஸ் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டவுடன், கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் தொடங்கும். அந்த நேரத்தில் வலிமையான தலைவர் ஐசிசிக்கு தேவை.