கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்களது நேரத்தை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகின்றனர். அதிலும் ஒரு சில சமூக வலைதளபக்கங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்தும், இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணலில் பங்கேற்றும் வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாத்கட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலைக்கு அளித்த நேர் காணலில், தனக்கு ஸ்டோக்ஸ் சூட்டிய பெயர் பற்றியும், ரஞ்சி கோப்பையை வென்றது குறித்தும் நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார்.
உனாத்கட் கூறுகையில், ‘கடந்த ஐபிஎல் தொடரின் போது, நான் ஸ்டோக்ஸுக்கு மாங்கனிகளைப் பரிசளித்தேன். உடனே அவர் என்னை அணியின் 'மேங்கோ மேன்' எனப் பெயர் சூட்டினார். தற்போதும் அவர் என்னை அவ்வாறே அழைக்கிறார். ஒரு போட்டியில் அவுட் ஆன பிறகு, பேட் மற்றும் ஹெல்மெட்டை சரமாரியாகப் போட்டு உடைத்தார். இருந்தாலும் அவர் ஒரு நல்ல நண்பர்' எனத் தெரிவித்தார்.