கோவிட்-19 பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதில் பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் லீக் சுற்று ஆட்டங்களுடன் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், பிஎஸ்எல் அணிகளில் ஒன்றான காராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் சல்மான் இக்பால், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தனக்கு கரோனா வைரஸுக்கான அறிகுறிகள் உள்ளதாக குறுந்தகவல் அனுப்பியது குறித்தும், அதன் பின் நடந்தவற்றைக் குறித்தும் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய சல்மான் இக்பால், “நாள்ளிரவு இரண்டு மணிக்கு அலெக்ஸ் ஹேல்சிடமிருந்து எங்களுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், ‘பாஸ், எனக்கு கோவிட்-19 அறிகுறிகள் உள்ளன. அதனால் நீங்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்பட வேண்டுமென நினைக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.
அதன் பிறகு அணி வீரர்கள் அனைவரையும் நாங்கள் பரிசோனைக்கு உட்படுத்தினோம். ஆனால் அணியில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என முடிவுகள் தெரிவித்ததையடுத்து, நாங்கள் பிஎஸ்எல் தொடரை ஒத்திவைக்க முடிவு செய்தோம்.
இதையடுத்து, அலெக்ஸ் ஹேல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ‘சனிக்கிழமை காலையில் எழுந்த போது நான் நலமுடன் உள்ளதாக உணர்ந்தேன். கரோனா வைரஸ் குறித்த எந்த அறிகுறியும் என்னிடம் இருப்பதாக தெரியவில்லை.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை காலை நான் எழுந்தவுடன் எனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டது. அதனால் நான் அரசு அறிவுறுத்தியுள்ள சுய தனிமைப்படுத்துதலை மேற்கொண்டுள்ளேன். இருப்பினும் இச்சூழலில் என்னால் பறிசோதனை மேற்கொள்ள முடியுமா என்பது தெரியவில்லை. இருந்தாலும் இன்று மதியத்திற்குள் என்னுடைய நிலை குறித்து நான் தெரியப்படுத்துவேன்’ என்று வெளியிட்டார்” என சல்மான் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘டாடி கூல்’ பாடலுக்கு மகனுடன் கூலாக நடனமாடி அசத்தும் தவான் !