இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர்.
இதனால் அணியில் சேர்ந்த ஒரே ஆண்டில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார். இதனால் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராகவும் வலம் வந்து அசத்தினார்.
தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள 2010 முதல் 2020 வரையிலான அனைத்து வகையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இவர் இந்த பத்தாண்டுகளில் 564 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மேலும் சர்வதேச அலவில் இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 535 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடத்திலும், ஸ்டூவர்ட் ப்ராட் 525 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சௌதி 472 விக்கெட்டுகளையும், ட்ரண்ட் போல்ட் 458 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.