மிர்சாவை கரம்பிடித்து ரசிகர்களை மலைக்கவைத்த மாலிக்
உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய பெண்களை காதலிப்பதும் மணம் முடிப்பதும் வாடிக்கையான ஒரு விஷயமாக தொடர்ந்துவருகிறது. இதற்கு சரியான எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை சொல்லலாம்.
இவர் 2010ஆம் ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை கரம்பிடித்து ரசிகர்கள் வாய்பிளக்கவைத்தார். இவர்களின் திருமணம் அப்போது பட்டிதொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது. அவரைத் தொடர்ந்து சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலியும், இந்தியாவைச் சேர்ந்த ஷாமியா அர்சூவாவை திருமணம் செய்தார்.
காதல் களத்தில் குதித்த ஆஸி. வீரர்
இந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரும் இந்தக் காதல் களத்தில் இறங்கியுள்ளார். அவர், ஆஸ்திரேலியாவின் கிளான் மேக்ஸ்வெல். இவர் ஆஸ்திரேலிய வாழ் இந்திய பெண்ணான வினி ராமனுடன் நெருக்கமாகச் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனை வினி ராமன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேக்ஸ்வெல் தனது காதலி வினி ராமனுடன் மேலும், இவர் வினி ராமனை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 30 வயதாகும் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்துவருகிறார். அது மட்டுமில்லாமல் ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப், டெல்லி அணிகளுக்காக விளையாடியவர்.
காதலில் விழுந்த ஆஸ்திரேலியாவின் வேகப்புயல்!
மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பெண்களை திருமணம் செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன் அந்த அணியின் ’வேகப்புயல்’ ஸ்வான் டெய்ட் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது மாசும் சின்கா என்ற இந்திய பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.