உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 34,01,189 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,39,604 பேர் உயிரிழந்துள்ளனர். இப்பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள், தன்னார்வ அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்துவருகின்றனர்.
அந்த வகையில், கரோனாவுக்கு எதிராக நிதி திரட்டும் விதமாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர் கடந்தாண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்திய ஜெர்சியை ஏலத்தில் விட்டார். அதேபோல இந்தியாவின் கோலி, தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் ஆகியோர் 2016 ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக பயன்படுத்திய பேட், கிளவுஸ், ஜெர்சி அடங்கிய ஸ்பெஷல் கிட்டுகளை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்தனர்.
தற்போது அவர்களது வரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கிப்ஸ் இணைந்துள்ளார். இவர், 2006இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தெ.ஆப்ரிக்க அணி 438 ரன்கள் சேஸ் செய்த போட்டியில் பயன்படுத்திய பேட்டை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 2006 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பயன்படுத்திய பேட்டை நான் இத்தனை ஆண்டுகளாக பத்திரமாக பார்த்துகொண்டுவந்தேன். தற்போது கரோனாவுக்கு எதிராக நிதி திரட்டும் விதமாக இந்த பேட்டை நான் ஏலத்தில் விடவுள்ளேன் என பதிவிட்டிருந்தார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு, 2006ஆம் ஆண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றது ஆஸ்திரேலிய அணி. முதல் நான்கு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்ததன. இதையடுத்து, தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக ஜோகனஸ்ப்ரக்கில் ஐந்தாவது போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 434 ரன்களைக் குவித்தது. 435 ரன்கள் என்ற கடின இலக்கை தென் ஆப்பிரிக்க அணி சேஸ் செய்யாது என்று நினைத்த ஆஸ்திரேலிய அணிக்கு கிப்ஸ் தனது பேட்டிங்கால் அதிர்ச்சி கொடுத்தார். அவர் 175 ரன்கள் அடித்ததால் தென் ஆப்பிரிக்க அணி இறுதியில் 438 ரன்கள் குவித்து சேஸிங்கில் புதிய சரித்திரத்தை படைத்தது.
இதையும் படிங்க: அன்று தென் ஆப்பிரிக்கா படைத்தது யாரும் கனவிலும் நினைக்காத சாதனை