இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ''நேற்று (அக்.22) இரவு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் கபில் தேவ் அனுமதிக்கப்பட்டார். இப்போது ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றாக உள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின், அவர் வீடு திரும்புவார்'' என்றார்.
இந்த செய்தி சமூகவலைதளங்களில் காட்டுத்தீயாக பரவிவரும் நிலையில், கபில் தேவ் விரைவில் குணமடைய வேண்டி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்தி வருகின்றனர்.
இது குறித்து இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ''உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் குணமடைவதற்காக பிரார்த்திக்கிறேன். மீண்டு வாருங்கள் பாஜி'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல் முன்னாள் வீரர் முகமது கைஃப், ''ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்குப் பின் விரைவாக நீங்கள் நலம்பெற வேண்டுகிறேன். நீங்கள் மிகப்பெரிய போராளி. இதிலிருந்து போராடி வெளிவருவீர்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.