உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஷஸ் டெஸ்ட் தொடர் முடிந்துள்ளது. இந்த இரண்டு மாதக் காலக்கட்டத்தில், தோனி எப்போது ஓய்வு பெறப்போகிறார்? தோனிக்கு மாற்று வீரராக ரிஷப் பந்த் பொறுத்தமானவரா? ரோகித் ஷர்மாவுக்கு டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவாரா? கோலியின் கேப்டன்ஷிப் சரியாக இருக்கிறதா? போன்ற பேச்சுக்கள்தான் இந்திய கிரிக்கெட்டை சுற்றியே வருகிறது.
சமூகவலைதளங்களில் ஒவ்வொரு நாளும் விவாதிக்கப்படும் இந்த விஷயத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பிர் கருத்து தெரிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு குறித்து கம்பிரின் பதில், "ஓய்வு என்பது தனிப்பட்ட நபரின் முடிவாகும். இந்த விவகாரத்தில் நான் எப்போதும் தெளிவாகவே இருப்பேன். தோனியின் ஓய்வு குறித்து, தேர்வுக்குழுவினர்தான் அவரிடம் பேச வேண்டும்".
தோனி இறுதியாக உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில்தான் விளையாடினார். அதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக கோலி அண்ட் கோ விளையாடிய டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டார்.
வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனி இடம்பெறுவார் என எதிர்பார்த்தபோது அவர் தனது தற்காலிக ஓய்வுக் காலத்தை (rest days) நீட்டித்துள்ளதால், மீண்டும் அவருக்கு பதிலாக ரிஷப் பந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ரிஷப் பந்த் தனக்கு வழங்கும் வாய்ப்பை அவர் மோசமான ஷாட் தேர்வினால் சொதப்பி வருகிறார் என பல்வேறு தரப்பினர் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ரிஷப் பந்த் குறித்து கம்பிரின் கருத்து, "இந்திய அணியில் புதிதாக இடம்பெற்றுள்ள ரிஷப் பந்த் மீதே அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். அவருக்கு 21 வயதுதான் ஆகிறது. அவர் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதம் விளாசியுள்ளார். அவரை மற்ற வீரர்களுடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறு.