இந்தியாவில் கரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று வேகமாக பரவிவருகிறது. இதுவரை இந்த வைரசால் நாட்டில் 979 பாதிக்கப்பட்டுள்ளதோடு, 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாம் நிலையில் உள்ள இந்த கோவிட் -19 வைரஸ் தொற்று மூன்றாம் நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் அடுத்த மாதம் 14வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் இந்தியர்கள் அனைவரும் தங்களால் முடிந்த நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
மேலும் நிதியளிக்க வேண்டிய வங்கி கணக்குத் தொடர்பான தகவல்களும் பகிரப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிழக்கு டெல்லி பாஜக எம்பியுமான கௌதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடி பிரதமரின் கரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கோவிட் -19 வைரஸை எதிர்த்து போராட நாம் அனைவரும் முன்வர வேண்டிய நேரம் இது. நான் எனது நாடாளுமன்ற தொகுதியிலிருந்து ரூ. 1 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். மேலும் எனது ஒரு மாத ஊதியத்தையும் மத்திய அரசின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன் என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, கம்பீரின் அறக்கட்டளை சார்பாக அவரது நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக இரண்டாயிரம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா:ரூ. 1,500 கோடி நிதியுதவி அறிவித்த டாடா!