தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வூட், அதிரடி பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளனர்.
அதே சமயம் தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரையில் இத்தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இதற்கு முன் இந்தியாவுடன் விளையாடிய தொடரில் படுதோல்வியடைந்து தொடரை இழந்தது.
இதன் காரணமாக இங்கிலாந்து அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நோக்கில் அந்த அணியின் முன்னாள் தொடக்கவீரரும் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆலோசகராக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் எனது அணியுடன்தான் இருக்கிறேன். இருப்பினும் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எனது ஆலோசனைகளை வழங்கி அந்த அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.
இவரின் இந்தத் தகவலைக் கேட்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஃபெடரருக்கு இன்ப அதிர்ச்சியளித்த சுவிட்சர்லாந்து அரசு!