அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையேயான சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பைத் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இத்தொடரில் எலைட் குழுக்களுக்கான போட்டிகள் பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா, இந்தூர், மும்பை ஆகிய நகரங்களிலும், பிளேட் குழுவுக்கான போட்டிகள் அனைத்தும் சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது.
இத்தொடருக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தின் ஏற்பாடுகளை பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி, பெங்கால் கிரிக்கெட் சங்கத் (சிஏபி) தலைவர் அவிஷேக் டால்மியாவுடன் இணைந்து நேற்று (டிச. 30) பார்வையிட்டார்.
மேலும் பெங்கால் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அருண் லால் மற்றும் பெங்கால் அணி வீரர்களிடம் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், பயிற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் செயலாளர் சினேகாசிஸ் கங்குலி, இணைச் செயலாளர் தெபிரதா தாஸ் ஆகியோரும் உடனிருந்தனர்.
சயீத் முஷ்டாக் அலி டி20 தொடரின் காலிறுதிச்சுற்று, அறையிறுதிச் சுற்று, இறுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:INDvsAUS: இந்திய அணியுடன் இணைந்தார் ஹிட்மேன்!