இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடத்தப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்தது.
இந்திய அணி முதன்முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதால் இந்தப் போட்டியைக் காண அதிக ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டுவருகிறது. அதன்படி இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலையை ரூ. 50 என குறைந்த விலையில் அறிவித்துள்ளது.
மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியைக் காணவருமாறு இந்தியப் பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்ற வங்கதேச பிரதமர், தான் வருவதாக உறுதியளித்துள்ளார். எனினும் இந்திய பிரதமரின் வருகை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாமல் உள்ளது.