டெல்லி: நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தால் ஒரு கேப்டனாக, தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து அந்தப் போட்டியின் நினைவலைகளிலிருந்து விவரித்துள்ளார் கங்குலி.
இதுதொடர்பாக கங்குலி கூறுகையில், “இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 325 ரன்கள் இலக்கை விரட்ட வேண்டும். நானும், சேவாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினோம். அப்போது கொஞ்சம் ஏமாற்றமும், அமைதியின்மையும் என் மனதில் இருந்தது. ஆனால் சேவாக் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்று என்னிடம் சொன்னார். அதற்கு ஏற்றார் போல் 12 ஓவரில் 82 ரன்கள் என நல்ல தொடக்கம் அமைந்தது.
புதிய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டோம். இனி விக்கெட்டை பறிகொடுக்காமல் சிங்கிள்ல் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சேவாக்கிடம் கூறினேன்.
அப்போது, ரோனி இரானி தனது முதல் ஓவரை வீச வந்தார். முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து மிரட்டினார் சேவாக். பின்னர் மெல்ல நடந்து சேவாக்கிடம், பவுண்டரி கிடைத்துவிட்டதால் சிங்கிள்களில் கவனம் செலுத்துவோம் என்றேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் அடுத்த பந்திலும் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்திலும் பவுண்டரி அடித்ததை பார்த்து கோபமடைந்தேன். அடுத்து ஐந்தாவது பந்திலும் ஒரு பவுண்டரி என முரட்டுத்தனமாக அடித்தார்.