கரோனா (கோவிட்19) பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும்பொருட்டு நிதியளிக்க வேண்டும் என மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று டெல்லி (கிழக்கு) தொகுதி எம்.பி.யான கவுதம் கம்பீர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் நிதியளிக்க முன்வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் இந்த நிதியை மருத்துவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இது தொடர்பாக டெல்லி மாநில அரசு இதுவரை எந்தப் பதிலும் தெரிவிக்கவில்லை என கவுதம் கம்பீரின் உதவியாளர் ஒருவர் கூறினார்.
முன்னதாக கவுதம் கம்பீர் ட்விட்டரில், “ஆம் ஆத்மி அரசாங்கம் முதலைக் கண்ணீர் வடிக்கிறது” எனக் கூறியிருந்தார். மேலும் கரோனா பாதிப்பில் மக்கள் அவதியுறும் இந்த இக்கட்டான நேரத்தில் கோடிக்கணக்கான தொகையை விளம்பரங்களுக்கு செலவிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்