பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
இதில் ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிதார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - புஜாரா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் சுப்மன் கில் அரைசதம் கடந்தார். மேலும் இந்த இணை பார்ட்னர்ஷிப் முறையில் 100 ரன்களை கடந்தும் அணிக்கு உதவியது.
ஒரு முனையில் புஜாரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் அதிரடியில் மிரட்டி வந்த சுப்மன் கில், சர்வதேச டெஸ்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 91 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானேவும் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி 24 ரன்கள் எடுத்திருந்த போது கம்மின்ஸிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் புஜாராவுடன் இணைந்து ரிஷப் பந்த் பொறுமையாக விளையாடி வருகிறார். இப்போட்டியில் இரண்டு ரன்கள் எடுத்திருந்த போது ரிஷப் பந்த் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்தார்.
இதன்மூலம் ஐந்தாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா 43 ரன்களுடனும், ரிஷப் பந்த் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியின் கடைசி செஷனில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 145 ரன்கள் தேவை என்பதால், வெற்றி பெறப்போவது யார் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:ஹாக்கி: அர்ஜென்டினாவுடன் டிராவில் போட்டியை முடித்த இந்தியா!