சச்சின் டெண்டுல்கர்:
"கிரிக்கெட் கடவுள்" சச்சின் டெண்டுல்கர் தோனியின் ஓய்வு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியின் பங்களிப்பு அளப்பரியது. 2011 உலகக்கோப்பையை ஒன்றாகச் சேர்ந்து வென்ற தருணம் என் வாழ்வில் மறக்கமுடியாதது. உங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி:
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பயணத்துக்கும் ஒருநாள்முடிவு உண்டு. ஆனால், மிகவும் நெருக்கமாக ஒருவர் அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகமான உணர்ச்சிகள் வெளிப்படும். நீங்கள் இந்த தேசத்துக்கு செய்தவை எப்போதும் ரசிகர்களின் இயத்தில் நீங்காமல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
வீரேந்திர சேவாக்:
இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது பதிவில், “மகி போல ஒருவீரர் இருக்க வாய்ப்பில்லை. வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், இவரைப் போல் அமைதியாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதோடும், குடும்பத்தோடும் இணைந்திருந்து ஓர் உறுப்பினராகவே தோனி இருந்தார். அவரது ஓய்வு மகிழ்ச்சியளிக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
சவுரவ் கங்குலி:
பிசிசிஐ-யின் தலைவர், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி தனது பதிவில், “கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் கிடைத்த அற்புதமான வீரர் தோனி. அவரின் தலைமைப்பண்புகள் வேறுவிதமானது. அதை வேறெதனுடனும் ஒப்பிடுவது கடினமான ஒன்று. ஒவ்வொரு நல்ல விஷயங்களும் ஒருநேரம் முடிவுக்கு வரும், அதுபோலத்தான் தோனியின் ஓய்வும். களத்தில் எந்தவிதமான வருத்தமில்லாமல் தோனி சகாப்தம் முடிந்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
ரவி சாஸ்த்திரி:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தனது பதிவில், "தோனியின் கிரிக்கெட் திறமை என்றென்றும் பேசப்படும். உங்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதில் பெருமையையும், சிறப்பையும் பெருகிறேன். உங்களின் சிறந்த தொழில்முறை கிரிக்கெட்டை கண்டுவியந்திருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் வீரருக்கு எனது சல்யூட். வாழ்க்கையை அனுபவியுங்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்:
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், “ஜாம்பவான்கள் எப்போதும் தங்களுக்கே உரித்தான வழியில் ஓய்வு பெறுகிறார்கள். தோனி நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை, 2011 உலகக்கோப்பை, சிஎஸ்கேவுக்காக ஐபிஎல் கோப்பை என அனைத்தும் என் நினைவில் நிற்கும். உங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.