தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#ThankYouMahi முடிவுக்கு வந்த இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம்! - MSD

'BATMAN' திரைப்படத்தில், 'You either Die a hero, or live long enough to see yourself become a villain' என்ற வசனம் வரும். இதுதான் பெரும்பாலான ஜாம்பவான்களுக்கு ஏற்படும் நிலை. பாண்டிங், கங்குலி, கபில் தேவ், மியாந்தத், ஏன் சச்சினுக்குகூட இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், இதனை நன்கு உணர்ந்த வீரர் தோனி மட்டும்தான்.

from-nairobi-to-manchester-the-tale-of-mahendra-singh-dhoni
from-nairobi-to-manchester-the-tale-of-mahendra-singh-dhoni

By

Published : Aug 16, 2020, 12:51 PM IST

''From 1929hrs consider me as Retired''

இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு பின் இந்திய கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக பயணித்தவரின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட தொடங்கின. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி அந்த வீரர் ஆட்டமிழந்தபோது, பலரின் மூளையிலும் எழுந்த கேள்விக்கு நேற்றிரவு பதில் கிடைத்துவிட்டது.

ஆம், இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி தனது 39ஆவது வயதில் ஓய்வை அறிவித்துவிட்டார். அவரது ரசிகர்கள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் சோக கீதங்கள் பாடத் தொடங்கிவிட்டனர். தனது ஆட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியத்தை விதைத்த தோனியின் ஓய்வு அறிவிப்பும் ஆச்சரியமாகவே இருந்தது. அவரின் பயணம் குறித்த விமர்சனங்கள், புகழ் மாலைகள், குற்றச்சாட்டுகள் என அனைத்தும் தற்போது ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகமாக அறியப்பட்டவர், கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இந்திய ரசிகர்களின் ப்ரஷரை தோளில் சுமந்தவர். ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் தொடங்கிய இவரது பயணம், 16 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்துவிட்டது.

'BATMAN' திரைப்படத்தில், 'You either Die a hero, or live long enough to see yourself become a villain' என்ற வசனம் வரும். இதுதான் பெரும்பாலான ஜாம்பவான்களுக்கு ஏற்படும் நிலை. பாண்டிங், கங்குலி, கபில் தேவ், மியாந்தத், ஏன் சச்சினுக்குகூட இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், இதனை நன்கு உணர்ந்த வீரர் தோனி மட்டும்தான்.

அதனால் ரசிகர்களின் ஆதரவும், ஃபார்மும் தன்னுடன் இருக்கும்போதுமே ஓய்வை அறிவித்துவிட்டார். இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. யார் ஓய்வு பெற்றாலும் அந்த வெற்றிடம் சில நாள்களில் நிரப்பப்பட்டுவிடும். ஆனால், தோனியின் கதையில் அப்படியல்ல. அதுதான் இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் தோனி ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்.

தோனி

சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், தோனி போன்ற ஒரு ஃபினிஷரை ஆஸ்திரேலிய அணிக்காக தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார். ஆஸ்திரேலிய வீரர்களைப் போன்று இந்தியாவுக்கு ஒரு வீரர் கிடைக்க மாட்டாரா என்ற நிலையை மொத்தமாக மாற்றிக் காட்டியுள்ளார் தோனி.

ஏன் இவரை அனைவருக்கும் பிடிக்கிறது? ஏன் சச்சினுக்கு பிறகு இவர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார்? ஏன் இவருக்கு இந்தியா கடந்தும் ரசிகர்கள் உள்ளார்கள்? ஏன் இவர் சிறந்த கேப்டன்? ஏன் இவர் சிறந்த விக்கெட் கீப்பர்? என பல கேள்விகளை மீண்டும் கேட்டு தோனியின் பயணத்தை மீண்டும் பார்ப்போம்.

ஒவ்வொரு மண்ணில் பிறந்தவர்களுக்கும் ஒரு குணம் இருக்கும். இப்போதும் 'கேப்டன் கூல்' என்று தோனியை ஒவ்வொரு ரசிகரும் அழைக்கும்போதும் ஒரு கேள்வியும் கூடவே எழும். ஏனென்றால் ஜார்க்கண்ட் போன்ற கந்தக பூமியிலிருந்து வந்தவர், எப்படி அந்த மண்ணின் குணம் இல்லாமல் இவ்வளவு அமைதியாக உள்ளார் என்பதுதான் ஆச்சரியம்.

தோனிக்கு முன்னதாக இந்திய அணிக்காக அறிமுகமாகிய விக்கெட் கீப்பர்களின் எண்ணிக்கை 24. அவர்கள் அனைவரும் மொத்தமாக 640 போட்டிகளில் ஆடி, 7,822 ரன்கள் எடுத்துள்ளனர். மற்ற அணிகளில் விக்கெட் கீப்பர்கள், பேட்ஸ்மேன்களாக நின்று வெளுத்து வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், இந்திய விக்கெட் கீப்பர்களின் நிலை பரிதாபமாக இருந்தது.

சொந்த நாட்டில் ரோல் மாடல் இல்லாமல் சுயமாக வெல்வது என்பது கடினமான ஒன்று. அந்த வகையில் தோனி தான் இந்தியாவின் முழுமையான விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன். நேற்று ஓய்வை அறிவிக்கும் போது அவர் 347 போட்டிகளில் ஆடி 10,599 ரன்களை எடுத்துள்ளார்.

விக்கெட் கீப்பர் என்பவன் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் கேப்டனுக்கு நிகரான அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். பேட்ஸ்மேன்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள், எந்த பந்துகளை சந்திக்க கஷ்டப்படுகிறார்கள், எந்த பக்கம் அடிக்க முயல்கிறார்கள், எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த ஃபீல்ட் செட் செய்ய வேண்டும் என அனைத்தையும் கணக்கிட்டு கேப்டனுக்கு கூற வேண்டும்.

2007 டி20 உலகக்கோப்பை

இதனிடையே பந்து வீச்சாளர்களுக்கும் எந்த மாதிரியான பந்துகளை வீச வேண்டும் என்று ஆலோசனை வழங்க வேண்டும். அந்த வகையில் தோனி என்றுமே கில்லாடி தான்.

ஸ்டம்பிற்கு பின் தோனி நின்றால், நிச்சயம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம் தான். அது குல்தீப், அஸ்வின், இஷாந்த் ஷர்மா என யாராக இருந்தாலும் சரி.

கேப்டன் தோனி:

சதுரங்கப் போட்டியில் ஒருவர் காய்களை எதற்காக நகர்த்துவோம் என்பது கடைசி வரை எதிராளிக்கு உள்ளவருக்கு தெரியக்கூடாது. அதுபோல் கிரிக்கெட்டில் கேப்டனின் செயல்களும் இருக்க வேண்டும். எந்த வீரருக்கு எந்த ஃபீல்ட் செட் செய்ய வேண்டும், எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும், எந்த மாதிரியான பந்தை வீச வேண்டும் என அனைத்தையும் தோனியே முடிவு செய்வார்.

2007ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான வாழ்வா, சாவா போட்டியில் ஆட்டம் டிரா ஆனது. அப்போது பவுல் - அவுட் முறையில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. அப்போது பந்துவீச சேவாக், உத்தப்பா, ஹர்பஜன் உள்ளிட்டோரை தோனி தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சரியமளித்தது.

ஏனென்றால் உத்தப்பா பந்துவீசி யாருமே பார்த்ததே இல்லை. ஆனால் வெற்றியை உத்தப்பா பெற்றுக் கொடுத்தார். ஒரு கேப்டன் என்பவன் தனது அணியை முழுமையாக நம்ப வேண்டும் என்பதோடு, எதிரணியின் பலம், பலவீனத்தையும் முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

2011 உலகக்கோப்பை

எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த மாதிரியான ஃபீல்ட்டிங் யுக்தியை பயன்படுத்த வேண்டும் என்பதில் தோனிக்கு நிகர் தோனி தான். எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் சிக்சர்களைப் பறக்கவிடும் கிறிஸ் கெய்ல், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கும்போது மட்டும் ஸ்லோ மோடுக்கு செல்வது ஏன் என்று யோசித்தால் புரியும்.

2011ஆம் ஆண்டு வரை கங்குலி அணியைக் கொண்டு தான் தோனி வெற்றி பெற்றார் என விமர்சித்தவர்கள் மத்தியில், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை, தன்னுடைய அணியை வைத்து வென்று காட்டினார் தோனி.

அந்தப் போட்டியில் 130 ரன்களை டிஃபெண்ட் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. கடவுள் வந்து நம்மை வெற்றி பெற வைக்கப் போவதில்லை, நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் தான் போராட வேண்டும் என்று வீரர்கள் மத்தியில் பேசியதோடு நில்லாமல், இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையைக் கைகளில் அள்ளினார்.

பேட்ஸ்மேன் தோனி :

சமீபத்தில் கிரிக்இன்ஃபோ (cricinfo) தளம் சார்பாக ஆல் டைம் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் குறித்த பட்டியல் வெளியானது. அதில் வழக்கம்போல் சச்சின், பாண்டிங், விராட் கோலி, காலிஸ், லாரா என டாப் ஆர்டர் வீரர்களின் பெயர்களே அணி வகுத்தன. அந்தப் பட்டியலில் 8ஆவது வீரராக தோனியின் பெயர் இருந்தது. அதாவது தனது கிரிக்கெட் வாழ்கையில் பெரும்பாலான நாள்கள் 6,7 வரிசையில் ஆடி, ஆல் டைம் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்கள் பட்டியல் இடம்பிடித்த ஒரே வீரர் தோனி.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைப் பின், இங்கிலாந்திற்கு இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அந்தத் தொடரில் உலகக்கோப்பையில் ஆடிய முக்கிய வீரர்கள் யாரும் இல்லை. பல முன்னணி வீரர்கள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு, புது வீரர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

அந்தத் தொடரில் தோனி 33(36), 6(5), 69(103), 78(71), 50(26) ரன்கள் எடுத்தார். மூன்றாவது போட்டியின்போது தொடர்ச்சியாக விக்கெட் வீழ்ந்த நிலையில், அதை நிறுத்த 103 பந்துகளை எதிர்கொண்டு 69 ரன்கள் எடுத்தார்.

நான்காவது ஒருநாள் போட்டியில் ரெய்னாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 71 பந்துகளில் 78 ரன்கள் அடித்தார். ஐந்தாவது ஒருநாள் போட்டியின்போது விராட் கோலி ஒருபுறம் சதம் விளாசியபோது, மறுமுனையில் 26 பந்துகளில் 50 ரன்கள் அடித்து பந்தை ஹெலிகாப்டர்களாக பறக்கவிட்டார்.

2013 சாம்பியன்ஸ் டிராபி

இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றவாறு தோனியின் ஒவ்வொரு இன்னிங்ஸும் அமைந்திருக்கும். தேவையென்றால் ஆங்கர் ரோல் எடுத்து ரன்கள் அடிக்கவும் தோனியால் முடியும். ஒருமுனையில் அமைதியாக நின்றுகொண்டு மறுமுனையில் புவனேஷ்வர் குமாரை அரைசதம் அடிக்க வைத்து வெற்றிபெற வைக்கவும் தோனிக்கு தெரியும்.

வெற்றி, தோல்வியை வைத்து ஒருவரின் பயணத்தையும் அளவிட முடியாது. அதேபோல தோனியின் சாதனை பட்டியலுக்கும் அவரது பேட்டிங் ஸ்டைலுக்கும் துளியும் சம்மந்தம் இருக்காது.

தெருவில் ஆடும் சிறுவனை அழைத்து மைதானத்தில் விட்டால், அவன் திணறி போவான். ஏனென்றால் தெருவில் ஆடும்போது அவனுக்கு கவர், டீப் மிட் விக்கெட், பாய்ண்ட் என எதுவும் தெரியாது. கிரிக்கெட் இலக்கணத்தில் இருக்கும் ஷாட்கள் எதுவும் தெரியாமலே அந்த ஷாட்களை ஆடியிருப்பான். அதுபோல் தோனியும்!

சர்வதேச கிரிக்கெட்டிலும் தோனி தனது ஆரம்ப கால ஸ்டைலில் தான் ஆடினார். பக்கா ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஸ்டைல்! தோனியை போன்று வேறு எந்த வீரரும் அந்த ஸ்டைலில் ஆடியதில்லை. இதுதான் தோனி ஏற்படுத்தியிருக்கும் மாற்றம். தெருவில் ஆடும் சிறுவனும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறலாம் என்ற நம்மிக்கையை விதைத்தது தான் தோனியின் சாதனை.

தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வந்த தோனி, தனது ஓய்வு அறிவிப்பிலும் ஆச்சரியத்தை அளித்துவிட்டார். உலகக்கோப்பைத் தொடருக்கு பின் 401 நாள்களாக எவ்வித முடிவையும் அறிவிக்காத தோனி, ஐபிஎல் தொடருக்காக நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னை வந்த அடுத்த நாளே ஓய்வை அறிவிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வை அறிவித்தாரோ, அதுபோல் ஒரு நாள் போட்டியிலும் பிசிசிஐ-க்கு ஒரு கடிதத்தை அனுப்பிவிட்டு, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு அறிவித்துவிட்டார்.

ஒவ்வொரு முறை டிஆர்எஸ்-ஐ பயன்படுத்தி நடுவரின் முடிவை மாற்றும் தோனி, தனது முடிவை மாற்றி மீண்டும் ஒரு முறை நீல ஜெர்சியில் களமிறங்க வேண்டும்.

எனவே இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரற்ற தலைவனை மஞ்சள் ஜெர்சியில் கடைசியாகக் கொண்டாடுவோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் அவர் சிஎஸ்கே அணிக்காக ஆடுவார் என தெரியாது. ஆனால் கிரிக்கெட்டை மீண்டும் ரசித்து ஆடப்போகிறார்.

கடைசியாக ஒருமுறை தோளைக் குலுக்கிக் களமிறங்கி, கைகளில் மாட்டிய கிளவுசை இறுக்கியவாறு, ஃபீல்ட் செட்டை பார்த்து முடித்தபின் பந்துவீச்சாளர் வீசும் பந்தை சிக்சராக்கும் தோனியை மீண்டும் பார்க்க வேண்டும்...!

Thank You Captain...

இதையும் படிங்க:தலைவன் இருக்கிறான் மறக்காதே!

ABOUT THE AUTHOR

...view details