இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வென்றதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் இந்தத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள நிலையில்,வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசில் பட்சர் உடல்நலக்குறைவால் இன்று அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடாவில் உயிரிழந்ததாக அவரது மகன் பசில் பட்சர் ஜூனியர் தெரிவித்துள்ளார்.
1960களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பசில் பட்சர். 1958இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர் கொல்கத்தா, சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் அடுத்தடுத்து சதம் என மொத்தம் 486 ரன்களை குவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1958 முதல் 1969 வரை 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஏழு சதம் உட்பட 3,104 ரன்களை குவித்தார். 1963இல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இவர் அடித்த 163 ரன்கள்தான் இவரது சிறந்த இன்னிங்ஸாகும். வலதுகை பேட்ஸ்மேனான இவரது பேட்டிங் ஃபார்ம் 1963 வரை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. 1963இல் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
இதனிடையே, உணவு இடைவெளியின்போது தனது மனைவிக்கு கரு சிதைந்த செய்தி இவருக்குத் தெரியவந்தது. இந்த துக்க செய்தியை அறிந்தும் மனம் தளராமல் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பில் தனி ஒருவராக போராடிய இவர் சதம் விளாசினார். 261 பந்துகளை எதிர்கொண்ட அவர் இறுதியில் 17 பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன் பலனாக, வெஸ்ட் இண்டீஸ் அணி 228 ரன்களை சேர்த்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அவரைத் தவிர மற்ற இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இவர் குறைந்தப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், இதுபோன்று இவரது பேட்டிங் குறித்து பேச அதிகம் உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் மறைந்த வீரரும் பிரபல வர்ணனையாளருமான ரிச்சி பெனாட் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பசில் பட்சரை ஆட்டமிழக்கச் செய்வது மிகவும் கடினம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:7,000 விக்கெட்டுகள்; 85 வயதில் ஓய்வு - வெஸ்ட் இண்டீஸ் வீரரின் 60 வருட பயணம்!