இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்துவீச்சாளருமான பாப் வில்லிஸ் உடல்நலக்குறைவு காரணமாக தனது 70ஆவது வயதில் காலமானார். தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 1971ஆம் ஆண்டு அறிமுகமான பாப் வில்லிஸ், பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 1970-80களில் உலக கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இவர் திகழ்ந்தார்.
குறிப்பாக 1981ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 43 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார். இங்கிலாந்து அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 325 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி வீரர் என்ற பட்டியலில் இவர் தற்போது வரை நான்காவது இடத்தில் உள்ளார்.
அதுமட்டுமல்லாது இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட இவர் கடந்த 1984ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதன்பின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தார். கடந்தாண்டு இங்கிலாந்து அணி ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிபோது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இவரை தேர்வு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.