இங்கிலாந்து நாட்டின் முன்னாள் ஆல்ரவுண்டர் டேவிட் கேபல் தனது 57 வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இத்தகவலை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நேற்று (செப்.02) உறுதிபடுத்தியது.
1987ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியில் அறிமுகமான கேபல், அந்நாட்டிற்காக 15 டெஸ்ட், 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், சமீபத்தில் இங்கிலாந்து மகளிர் அணியில் உதவி பயிற்சியாளராகவும் இருந்து வந்தார்.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரிக்கெட் உலகம் டேவிட் கேபலின் அர்ப்பணிப்பை இழந்துள்ளது. அவருடைய குடும்பத்தினருக்கும், அவரது நண்பவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்தாம்ப்டன்ஷையர் கிளப்பில் ( Northamptonshire's club) ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் கேபல் 33 ஆண்டுகள் இருந்துள்ளார். அவரது சேவையை கவுரவிக்கும் விதமாக அவர், 'நார்தாம்ப்டன்ஷையரின் ஹால் ஆஃப் ஃபேமில்' கேபல் சேர்க்கப்பட்டார். முதல் தர போட்டிகளில் கேபல் மொத்தம் 10,869 ரன்களைக் குவித்துள்ளார். 467 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
1981, 1998ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கேபல் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக 270 முதல் தரப் போட்டிகளிலும், 300 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் களமிறங்கியுள்ளார். மேலும், சுமார் 77 ஆண்டுகளுக்குப் பின் நார்தாம்ப்டன்ஷையர் அணியில் இருந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முதல் வீரர் என்ற சிறப்பையும் கேபல் பெற்றார்.
இதையும் படிங்க: 'சின்ன தல' ரெய்னா அணிக்கு திரும்புவரா? கைவிரிக்கும் சீனிவாசன்