இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பிரதான பவுலராக இருந்த இவருக்குத் தொடர் காயங்களால் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதன்பின் கடந்த 2018ஆம் ஆண்டு பிரவீன் குமார் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் வசிக்கும் பிரவீன் குமார், தன்னைத் தாக்கியதாக அவரது பக்கத்து வீட்டுக்காரரான தீபக் சர்மா என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், ' நான் என்னுடைய ஏழு வயது மகனுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது அங்கு வந்த பிரவீன் குமார் என்னையும் பேருந்து ஓட்டுநரையும் தகாத வார்த்தைகளால் பேசினார். குடிபோதையில் இருந்த அவர் என்னை அடித்து என் கையை உடைத்தார்.
அது மட்டுமல்லாது பிரவீன் குமார் கீழே தள்ளியதால் எனது மகனுக்குக் காயம் ஏற்பட்டது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது அவர்கள் புகாரை வாங்க மறுத்து, தன்னை சமாதானம் செய்ய வற்புறுத்துகின்றனர். மேலும் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது ' எனத் தெரிவித்தார்.