ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் 2018ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சூதாட்ட விவகாரத்திற்கு பிறகு சென்னை அணி 2018இல் கோப்பையுடன் கம்பேக் தந்ததற்கு வாட்சனின் பங்களிப்பும் முக்கிய காரணம்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். 2018 ஐபிஎல் சீசன் அமைந்ததை போல, வாட்சனுக்கு கடந்த சீசன் அமையவில்லை.
கடந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பிய அவர், மும்பை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று சிறப்பாக விளையாடினார். தனது இடது காலில் ரத்தம் வந்ததைகூட பொருட்படுத்தாமல் அவர் 59 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணிக்காக போராடினார். இறுதியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில், சொதப்பிய போதும் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு தந்ததால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என ஷேன் வாட்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.