தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியனில் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட பணித்தது.
அதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டி காக் நிலைத்து ஆடி அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்த தொடங்கினார்.
அவர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக் 95 ரன்கலில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் என்ற மரியாதையான ஸ்கோரை எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், சாம் கர்ரன் தலா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் வரிசையாக பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் பிலாண்டர் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.