இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று(ஜனவரி 7) தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இப்போட்டிக்கான இந்திய அணி நேற்றே (ஜனவரி 6) அறிவிக்கப்பட்ட நிலையில், காயம் காரணமாக விலகிய உமேஷ் யாதவிற்குப் பதிலாக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக, மற்றொரு அறிமுக வீரர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் 2021ஆம் ஆண்டின் முதல் ஏமாற்றம் என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்தனர். ஏனெனில், ஆஸ்திரேலியா அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தனது அபார பந்துவீச்சு திறனால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர், நடராஜன்.
இதனால், அப்போதே அவர் இந்திய டெஸ்ட் அணியிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்ததால், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.