இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன். இவர் தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க மறுக்கிறார் என ஹைதராபாத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் சஹாப் முகமது என்பவர் காவல் துறையினரிடம் புகாரளித்தார். இதையடுத்து முஜீப் கான், சுதேஷ் அவிக்கல், முகமது அஸாருதீன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அந்தப் புகாரில், கடந்த ஆண்டு நவம்பர் 9 முதல் 12ஆம் தேதி தேதி வரை அவிக்கல் (அவிக்கல் உதவியாளர்) என்பவர் தனீஷ் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடர்கொண்டு விமானப் போக்குவரத்துக்கான டிக்கெட்டுகள் புக் செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார். டிக்கெட்டிற்கானப் பணம் குறித்து கேட்கப்பட்டபோது, தான் அவசரநிலையில் உள்ளேன். அதனால் பின்னர் தருகிறேன் எனக் கூறியதால் டிராவல்ஸ் உரிமையாளர் உடனடியாக டெல்லி, மும்பை, பாரிஸ், ஆம்ஸ்ட்ரடாம், துபாய் உள்ளிட்ட ஏராளமான நகரங்களுக்கு விமான டிக்கெட்டுகள் புக் செய்து கொடுத்துள்ளார்.
இதற்கு ரூ.21 லட்சம் வரை செலவாகியுள்ளது. ஆனால் டிக்கெட் புக் செய்ததற்கான கட்டணம் 15ஆம் தேதி வரையிலும் வராததால், டிராவல்ஸ் உரிமையாளர் சஹாப் முகமது, அவிக்கல் என்பவைத் தொடர்புகொண்டு பேசியபோது ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் வங்கியில் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.