தாதா கங்குலியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில், பார்த்திவ் படேலும் ஒருவர். விக்கெட் கீப்பரான இவர் தனது 17 வயதில் 2002இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதையடுத்து, 2003 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் ராகுல் டிராவிட் இருந்ததால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அது பின்நாட்களில் (2005) தோனியின் வருகையால் குறைந்தது.
இருப்பினும் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிவந்ததால் இவருக்கு 2018இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 2018-19 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் இருந்ததால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையே, ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத், மும்பை அணிகளுக்காக விளையாடிவந்த இவர் தற்போது பெங்களூரு அணியில் இடம்பெற்றுள்ளார்.