இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையேயான பகலிரவு பயிற்சி ஆட்டம் நேற்று சிட்னியில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனோடு முதல் நாள் ஆட்டம் நிறைவு பெற்றது.
இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர் ப்ரித்வி ஷா வழக்கம்போல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் - மயங்க் அகர்வால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதமும் கடந்தனர்.
அதன்பின் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மயங்க் அகர்வால் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 65 ரன்களுடன் சுப்மன் கில்லும் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானே 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி - ரிஷப் பந்த் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் ஹனுமா விஹாரி சதமடித்து அசத்த, ஆட்டநேர முடிவில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்தும் 73 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 386 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஹனுமா விஹாரி 104 ரன்களுடனும், ரிஷப் பந்த் 103 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க:தென் ஆப்பிரிக்கா அணியின் டெஸ்ட் கேப்டனாக டி காக் நியமனம்!