கரோனா வைரஸ் காரணமாக வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் 2022ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஐசிசி ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 1.30 மணியளவில் காணொலி நேரலை மூலம் நடைபெறவுள்ளது.
ஒருவேளை இந்த டி20 உலகக்கோப்பை தொடர் தள்ளிவைக்கப்பட்டால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனியின் எதிர்காலம் முடிவுக்கு வருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இறுதியாக, கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி அணியில் இடம்பிடிக்காமல் இருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறபோகிறார் என்ற பேச்சு நீண்ட நாள்களாக இருந்துவருகிறது. ஆனால் இது குறித்து தோனி இன்னமும் அமைதி மட்டுமே காத்துவருகிறார்.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தோனியின் ஆட்டத்திறனை பொறுத்து அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரும் கரோனா வைரஸால் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை 2022க்கு தள்ளிவைக்கப்பட்டால் அப்போது தோனியின் வயது 40ஐ எட்டிவிடும். இதனால், அவரது எதிர்காலம் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தோனியின் எதிர்காலம் குறித்து, மூத்த விளையாட்டு பத்திரிகையாளர் சேகர் லுத்ரா நமது ஈடிவி பாரத்திற்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "இனி தோனி இந்திய அணிக்காக விளையாட மாட்டார். அவர் தற்போது இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். என்னை பொறுத்த வரையில் 2015 உலகக்கோப்பை தொடருக்கு பிறகே அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அவர் நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!