டிவி தொகுப்பாளர்களின் மீது எப்போதும் அனைவருக்கும் ஒரு பிரியம் இருக்கும். அவர்களின் ஆடை, வசனங்கள், குரல், ஸ்டைல் என அனைத்தும் கண்காணிக்கப்படும். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தவறு செய்தால், மீண்டும் டேக் செல்லலாம். ஆனால், விளையாட்டுத் தொகுப்பாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. ரசிகர்களை வரவேற்பதில் தொடங்கி, ஆட்டத்தின் ஆடும் அணிகளின் சாதக, பாதகங்கள், என்ன தவறு செய்தார்கள், யார் ஆதிக்கம் செலுத்தினார்கள் என அனைத்தையும் நேரலையில் ஆராய்ந்து வேகமாகக் கூற வேண்டும்.
அதில் ஏதேனும் தவறு நடந்தால், உடனடியாகச் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்க்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், ஒரு சில தொகுப்பாளர்கள் இதனைச் சர்வ சாதாரணமாக நேரலையில் கூறிச் செல்வார்கள். அப்படி ஒருவர்தான் தொகுப்பாளினி சைனாப் அப்பாஸ்.
பாகிஸ்தானின் பிரபல விளையாட்டுத் தொலைக்காட்சியின் தொகுப்பாளினி சைனாப் அப்பாஸ். பாகிஸ்தானைக் கடந்தும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். நம்ம ஊரில் மயாந்தி லாங்கர் எப்படியோ, அதேபோல்தான் பாகிஸ்தானில் சைனாப் அப்பாஸ். சமீபத்தில், ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த நபர்களின் 100 பேர் பட்டியலில் இவரும் இடம்பெற்றிருந்தார்.
இவர் தனது வாழ்க்கைப் பயணம் பற்றி நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேக நேர்காணலில் பேசியுள்ளார். அந்த நேர்காணலில், ''ஆசியாவின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் பட்டியலில் இடம்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக உள்ளது. எனது வேலைக்கு கிடைத்த ஊதியமாகவே இதைப் பார்க்கிறேன்.