ஐபிஎல் 13 சீசன் தொடரில் பங்கேற்பதற்காக, எட்டு அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தரையிறங்கிவிட்டனர். வீரர்கள் பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், தற்போது வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் செப்.19ஆம் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
இதனாலேயே ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஈ டிவி பாரத் செய்திகளுக்குப் பிரத்யேக பேட்டியளித்துள்ளார். கரோனா நாள்கள், ஐபிஎல் 13 சீசன், ஃபிட்னெஸ் என, பல விஷயங்களை நம்மோடு அவர் பகிர்ந்துள்ளார்.
இந்தியா உள்பட உலக நாடுகள் ஊரடங்கிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வரும் உணர்வு எப்படி உள்ளது?
கரோனா சூழல் ஒவ்வொருவருக்கும் கடினமானது தான். சாதாரண மக்கள் பலர் பெரும் துன்பங்களை சந்தித்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை நான் பாதுகாப்பாக இருந்தேன். எனது உடல்நிலையை நன்றாக பேணி காத்துள்ளேன். வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது. பந்துவீச்சு பயிற்சியை தான் அதிகமாக மிஸ் செய்தேன்.
உங்களின் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்?
இதுபோன்ற சூழல்களில் அனைவரும் தங்களின் உணவில் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். எனது பயிற்சியாளர் என் சிறுவயதின்போது, உணவைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அப்போதிருந்து நான் கட்டுப்பாடாக உள்ளேன். காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி. கிரிக்கெட் இல்லாத நாள்களில் என் உடற்தகுதியில் இன்னும் அதிகமாக அக்கறை கொள்ள முடிந்தது.