இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்காக விளையாடிவரும் இவர், சிறப்பான பந்துவீச்சு காரணமாக அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார்.
மேலும் இந்திய அணிக்காக மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள கவுல், தனது இடத்தை தக்கவைக்க தவறிவிட்டார் என்பதே நிதர்சன உண்மை.
சமீபத்தில் நடந்து முடிந்த சயீத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்நிலையில், சித்தார்த் கவுல் ஈடிவி பாரத்துடன் சிறப்பு நேர்காணலில் பங்கேற்றார். அதுகுறித்த தொகுப்பு இதோ..!
கேள்வி: 2008ஆம் ஆண்டு (U19) உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் கடைசி ஓவரை வீசியது எப்படி இருந்தது?
சித்தார்த் கவுல்: கிரிக்கெட்டில் நீங்கள் முதல் ஓவரை வீசினாலும், கடைசி ஓவரை வீசினாலும் உங்களுக்கு அழுத்தம் என்பது கண்டிப்பாக இருக்கும். அதிலும் நீங்கள் விளையாடும் போட்டியை ஒரு நாடே பார்க்கிறது என்றால், அப்போட்டியில் வீரர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இருப்பினும் நான் என்னால் முடிந்தவற்றை அப்போட்டியில் செய்தேன்.
கேள்வி: இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது?
சித்தார்த் கவுல்: இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது, நான் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தேன். போட்டியின் போது போட்டி நடுவர் வாக்கி டாக்கி மூலம் களநடுவரிடம் நான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியைக் கூறியுள்ளார்.
அப்போது களநடுவர் அச்செய்தியை என்னிடம் கூற முயற்சித்தார், ஆனால் அவர் கூறியது எதுவும் எனக்கு புரியவில்லை. நான் தொடர்ந்து பந்துவீசுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன். அந்த ஓவருக்கு பிறகு கள நடுவர் என்னிடம் அச்செய்தியை கூறினார்.
நான் உற்சாகத்தில் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நின்றேன். அதன்பின் உடனே களத்திலிருந்த ஹர்பஜன் சிங்கை கட்டி தழுவி எனது உணர்ச்சியை வெளிப்படுத்தினேன்.